புத்தகப் பூங்கா...!

வலுப் பெறட்டும் வண்ணத்துப் பூச்சிகள்..! - தாண்டவக்கோன்

(பிப்ரவரி - 2009 புத்தகம் பேசுது இதழில் வெளியான நூல் மதிப்புரை)

நூல் - வண்ணத்துப் பூச்சிகளும் கண்ணாடி அறைகளும்

நூலாசிரியர் - புதுகை சஞ்சீவி

தொடக்கத்திலேயே தான் எழுத்தாளர் கந்தர்வனால் ஆசீர்வதிக்கப்பட்டவன் என்பதைப் பெருமையுடன் குறிப்பிடும் நூலாசிரியர் அந்த ஆசிக்கு முற்றிலும் தான் பொருத்தமானவனே என்பதை தொகுப்பு நெடுக நிரூபிக்கிறார். பின் அட்டையை அலங்கரிக்கும் அவரது விருதுப் பட்டியல் உத்திரவாதம் கொடுத்துத் தொகுப்பினுள் இழுக்கிறது நம்மை.

நம் ‘அஞ்சாங்கோப்பு சேக்காளி’ எதிரே உட்கார்ந்து சிறுவயது அனுபவங்களை அள்ளிக் கொட்டுகிற மாதிரி பேசியிருக்கும் சஞ்சீவியின் தன்னுரைகூட ஒரு சிறுகதையாய்ச் சுகிக்க வைக்கிறது நம்மை. அப்படி என்ன மயக்கம் இருக்கிறது இவ்வெழுத்துக்களில்..எது வந்து வருடுகிறது இக்கதைகளில்.. என்ன மாயம் செய்கிறார் இப்படைப்பாளி...?

வேறொன்றுமில்லை, வரட்டுக் கற்பனைகளுக்கும் வம்படியான உத்திகளுக்கும் ஆட்படாத யதார்த்தவாதக் கோட்பாடுகளால் வெல்கிறார் ஆசிரியர். யதார்த்தவாத இலக்கியப் புனைவுகளை மிஞ்ச யதார்த்தவாதப் புனைவுகளே உண்டு என்பதற்கு இத்தொகுப்பு ஒரு அடையாள அட்டை.

இன்றைய தடாலடி டிஜிட்டல் உலகில், எழுத்து இலக்கியத்திற்கான புதிய வாசகர்கள் உருவாகும் சாத்தியங்களைப் பெருக்கிக் கொள்ள, இம்மாதிரி நேர்கோட்டு - யதார்த்தவாதப் படைப்புகளுக்கு இலக்கிய உலகம் தம் கதவுகளை அகலத் திறந்து வைப்பதே சாலச் சிறந்தது.

சஞ்சீவியின் கதை மாந்தர்கள் கற்பனைப் பாத்திரங்களே அல்லர் எனும் ரகசியத்தை ஒவ்வொரு கதையும் நம் காதில் ரகசியமாகச் சொல்லி விடுகின்றன. அதே நேரம் நம்மைச் சுற்றி அங்கங்கே தென்பட்ட மனிதர்களெல்லாம் எப்படி சஞ்சீவி பேனாவினுள் போனார்கள் எனும் யோசனையும் தொகுப்பில் வருகிறது.

அணிந்துரையில் பெருமாள் முருகன் வியந்து கொண்டது போலவே நமக்கும் ஆச்சரியம்தான்... இந்த மாதிரி விசயங்களைக் கூடச் சிறுகதைகளாக்க முடியுமாவென்று...நியாயப்படி பார்த்தால் தொகுப்பின் பதினேழு கதை பற்றியும் பேசித்தானாக வேண்டும். ஆனால் இடம் கருதி சில பேசுவோம்...

ஒரு சிலரை பால்கனியிலும் ஒரு சிலரை பாதாளச் சாக்கடையிலும் வைத்திருக்கிறது ஏகாதிபத்தியப் பொருளாதார உலகம். பால்கனி மனிதர்களுக்கு பீடா மடிப்பதை விட இன்றைய இலக்கிய முயற்சியின் கடமை என்பது சாக்கடைச் சேற்றை அள்ளிச் சமூகத்தின் முகத்தருகில் காட்டுவதேயாகும், சஞ்சீவி நிறையவே காட்டுகிறார்.

திருமதி தலைவர் கதை தொடங்குகிற புள்ளியில் நிச்சயம் ஊகிக்க முடியவில்லை, கதை இங்குதான் போகிறதென்று. திருமதி பஞ்சாயத்துத் தலைவிகள் ஆணாதிக்கச் சமூகத்தில் என்ன பாடு படுகிறார்கள் என்பதை ஒரு டிவி பெட்டி டெலிவெரி ஆளாக இருந்து சஞ்சீவி சொல்லும் விதம் வெகு நுட்பம்.

ஜாதகம் கதையின் ‘இவ’னும் பசி கதையின் தியாகுவும் மூடப் பிசாசுகளாக நம்மை எரிச்சல் படுத்துகிறார்கள். நார்த்தா மலையில் அன்னதானம் என்றதும் பொத்துக் கொண்ட கோபத்தில் ‘எஞ்சம்பளத்தை வச்சிட்டுப் போடா ’ என்று கத்தியது நாமா அல்லது சஞ்சீவியா என்று இன்னும் குழப்பம்..

சுயம் கதையில் அரவாணிகளுக்காக ஒலிக்கும் சஞ்சீவியின் குரல் வேறெங்கும் கேட்டதாக நினைவில்லை. கந்தர்வன் தலைப்பிட்ட பிழைத்தல் கதையில் பொருளாதாரச் சுனாமிக்கு அடிபட்ட மனிதர்கள் பிழைப்புக்காக ஏங்குகிறார்கள். ஒடுக்கப்பட்ட மனிதர்களின் வலியையும் எல்லை மீறும் போது வெடிக்கும் அவர்களின் குமுறலையும் உணர்ந்தே எழுதியிருக்கிறார். நகர்ப்புற விளிம்பு நிலை மக்கள், சிறுவர் மன உலகம், டீக்கடை பணிமனை, கடை வீதிகள் என்று சஞ்சீவி பறக்கும் கற்பனைக் குதிரையின் குளம்படிச் சத்தம் சாமான்யர்களின் குமுறலை அதிர்வுகளோடு சொல்கிறது.

கதைகளுக்கான தலைப்புகளைப் பார்க்கும் போது கதாசிரியர் முதுகுக்குப் பின்னால் ஒரு கவிஞரும் நிற்கிறார் என்றே தோன்றுகிறது. வட்டார வழக்கு நடை ஆங்காங்கே முகவரி காட்டிக் கை குலுக்குகிறது.தொகுப்பு முழுக்கத் தெறித்துக் கிடக்கும் ‘எதிலேனும் இடித்து நெளிந்து போன ஆட்டோவை சிறிய சுத்தியால் தட்டித் தட்டிக் சரி செய்தது போல இருந்தது எனும்’ அனுபவ உவமேயங்களைப் பொறுக்கிக் கொண்டே புத்தகம் படிப்பது வாசிப்புத் தளத்திற்கு வலு சேர்க்கிறது.

வார்த்தைகளுக்காகவும் புலமைத்தன ஜாலங்களுக்காகவும் தண்டால் பஸ்கியெல்லாம் எடுக்காமல், தன்னைச் சுற்றியுள்ள பொருளாதார வக்கிரங்களுக்கு அடியான, ஆதிக்கக் விகாரங்களுக்கு இலக்கான எளிய மனிதர்களுக்காகத் தன் யதார்த்தப் பேனாவோடு களத்தில் இறங்கியுள்ள ஒரு புத்தம்புது படைப்பாளியின் சிந்தனைகளை, ‘உம்’ கொட்டி உள்வாங்குவதே நம் முதல் கடமை, வாங்குவோம்.

நம் வீட்டுப் புத்தக அடுக்குகளில் கம்பீரமான இடம் தர வேண்டிய ஒரு தொகுப்பு இந்த ‘வண்ணத்துப் பூச்சிகளும் கண்ணாடி அறைகளும்’. நூலை வெகு அழகாய் அச்சிட்டு எண்பது ரூபாய்க்குத் தரும் காவ்யா பதிப்பகமும் நம் பாராட்டுக்கு உரியதே.


‘கடவுளைக் கண்டுபிடிப்பவன்’


அமிர்தம் சூர்யா சிறுகதைத் தொகுப்பு மதிப்புரை - தாண்டவக்கோன்.



புதுமைகளோடு அறிமுகமாகும் லேட்டஸ்ட் கம்ப்யூட்டர் மாதிரி அசத்தலாக வந்திருக்கிறது ஒரு சிறுகதைத் தொகுப்பு. கம்ப்யூட்டரை நாம் கிளிக்குவதற்கு பதிலாக அது நம்மைக் கிளிக்குகிற அளவுக்குப் புதுமை செய்திருப்பதுதான் அமிர்தத்தின் கதைப் பாணி. இல்லையில்லை அமிர்தப் பாணி கதை.. நோ கதைப் பாணி அமிர்தம்.. ஒரு வேளை பாணி அமிர்தக் கதை..? சரி விடுங்கள்..



‘அமிர்தம் சூர்யா(1966)’, ‘வெள்ளை அறிக்கை’, மற்றும் எண்களால் பொருளடக்கம் என்று எடுத்த எடுப்பிலேயே கிளிக்காகி விடுகிறது நம் மீதான சூர்யாவின் ஹிப்னாடிஸம்.. போதாக் குறைக்கு வெவ்வேறு புள்ளிகளை ஒரே கோடாக்குவதென, தொகுப்பின் பதினான்கு கதைகளின் மொத்தப் பாத்திரங்களையும் பொதுவான பத்துப் பாத்திரங்களாக வரித்துக் கொண்டு அவர் நிகழ்த்தும் பொம்மலாட்டம் நம்மைச் சாவி கொடுத்த பொம்மையாக்கி கடைசிப் பக்கம் வரை பரபரப்போடு முடுக்கி விடுகிறது.



பொதுவில், கதையாகட்டும் கவிதையாகட்டும் அமிர்தத்தின் நவீனத்துவம் மற்றவை போல நம்மை ராகிங் செய்வதில்லை. கொஞ்சம் வாஞ்சையோடுதான் புழங்க முயல்கின்றன. ஆனால் அவரது கற்பனை வீச்சுத்தான் கற்பனைக்கு எட்டாதது. எப்போதும் போல் ஜூவல்லரி மஞ்சள் பையோடு அமிர்தக் கதைகளுக்குள் போகக் கூடாது. ஏனென்றால் அவர் சரக்கை கப்பலில்தான் நிரப்பிக் கொண்டு வருகிறார். நமது பை நிரம்பினாலும் விடுவதில்லை அவர். கை, கழுத்து, இடுப்பு, இண்டு, இடுக்கு என்று நம் மீது எத்தனை முடியுமோ அத்தனை பாரத்தை ஏற்றி விடுகிறார். ஆனால் என்ன ஆச்சரியம் அவரின் கற்பனைச் சுமை கூடக் கூட, நாம் நமது சொந்த எடையையும் இழந்து இறகு போல் பறக்கிறோம்..



தன்னிலை முன்னிலையில் படர்க்கை பேசி சர்க்கஸ் காட்டுகிறார். ‘தாமரைக் காட்’டில் அப்படித்தான் எதிரில் நின்று பேசுகிறவர், திடீரென்று நம்மோடு வந்து உட்கார்ந்து கொண்டு வேறு ஆட்களைப் பற்றிப் பேசுகிறார். அப்புறம்தான் தெரிகிறது அவர்களெல்லாம் சேர்ந்து கொண்டு நம்மைப் பற்றிப் பேசுகிறார்களென்று. ‘கிருஷ்ணன் பைத்தியமானத நம்பாம கறவை மாடுகள் அவன சுத்தி நின்னுக் கிட்டு இருந்துச்சு’ என்ற ஒரு ஒற்றை வரியை ஸ்கேனிங் செய்தாலே போதும் சூர்யா சொல்ல வந்ததை விட சொல்லாதவை பிரமிப்பானவை என்று. அதைக் கண்டு கொண்டவர்களுக்கு ‘கடவுளைக் கண்டவர்கள’£க பிரமோஷன் தருகிறார் சூர்யா.



கதைகளில் திருப்பங்கள் வைப்பார்கள். திருப்பங்களையே கதைகளாக்கினால்..? ஆனால் அதற்காக அவர் எந்த ஒரு மோடி மஸ்தான் வேலைக்கும் போகவில்லை. சாதாரணங்களை அசாதாரணங்களாக்கி அவற்றை மறுபடி சர்வ சாதாரணங்களாகத் தருகிறார். ஐந்து வயதுப் பையன் பஜாஜ் ஓட்டுகிறானென்றால் அது அசாதாரணம்தான். ஆனால் அது எத்தனை சாதாரணம் என்ற ஆச்சரியம் ‘வலியின் நக’லைப் படிக்கிறவர்களுக்கு சர்வ சாதாரணமாகப் புரியும்.



ஆயாவை சிறுகதையாக்கியிருக்கும் கதை உட்பட பல கதைகளில் படைப்பாளிக்கு ஒரே களியாட்டம்தான். கைகளில் அரூபமாக எதையோ மறைத்து வைத்துக் கொண்டு நம்மைக் கதை கேட்க அழைக்கிறார். நாமும் யதார்த்தமாக இசைகிறோம். மயிலிறகால் வருடியபடி ஆரம்பிக்கிறார். கதையில் நாம் மூழ்கியிருக்கும் மோன பதத்தில் பொடேரென்று பின்னந் தலையில் ஒரு சம்மட்டி அடி விழுகிறது. அய்யோ என்று கத்தி விட்டு உற்றுப் பார்த்தால் சம்மட்டி நம்மிடம் இருக்கிறது. அடித்து விட்டு நம் கையில் திணித்து விட்டாரா, அல்லது நாமே சம்மட்டியைப் பிடுங்கி அடித்துக் கொண்டோமா என்று புரிவதில்லை. சரி வீக்கத்தை வருடி விடுவாரென்று அடிபட்ட மண்டையை அவரிடம் காட்டினால் பொடேரென்று அதே இடத்தில் இன்னொரு அடி. எப்போது சம்மட்டி அவரிடம் போனதென்றும் தெரியவில்லை. கதை முடிந்து சூர்யா கிளம்பும்போது பார்த்தால் அவரின் கைகளில் மயிலிறகு மட்டுமே இருக்கிறது.



ஈர்த்துக் கொள்ளும் காந்தங்களின் வட தென் துருவங்களுக்கும் அரசியல் வாதிகள் காலில் விழுந்து கொள்வதற்கும் இப்படியொரு முடிச்சுப் போடுகிறாரென்றால் சூர்யாவுக்கு எதிரே முழங்காலாவது மொட்டைத் தலையாவது. எல்லாம் ஒன்றுக்குள் ஒன்று அடங்கும் சூர்ய ரகசியம். சித்தமும் அத்துப்படி சித்த பிரமையும் அத்துப்படி. பொய் என்பது அது பொய் என்ற அளவில் உண்மையாம். அடடா அமிர்தப் பேனா எத்தனை அதிசயமானது...



போன ஜென்ம பந்த ஜிலேபிக் கருப்பு வெல்ல அதிரச மார்பகப் பிதுக்கலில் கடவுளின் கொஸ்ட்டீன் பேப்பரோடு கிருஷ்ணனுக்கு ராதையென்றொரு மனைவியே இல்லையென 40 வயது சீதா ஆண்ட்டியைக் கடத்திப் போன ராவணத் தமிழனனின் மட்டமான ரசனையை சராசரியில்லாத படைப்பாளி மனதின் கற்பனை உண்மையாக்கி டீ போட்டு டா போட்டு செக்ஸில்லாத டுபாக்கூர் லவ்வை பாஞ்சாலியின் தொலைபேசிச் சொற்பொழிவிலிருந்து உடல் மீதான பிடிமானம் விலகி - அப்பப்பா, கடவுளேனும் சிக்குவார் போலிருக்கிறது. சூர்யா பிடி கொடுக்க மறுக்கிறார்.



பட்டத்து யானைக்கு மதம் பிடித்த மாதிரி எதற்கு இந்தத் தகராறு..? வேண்டாம் அய்யா, இன்னும் கொஞ்சம் வெளிப்படைக்கு வாருங்களென்று கேட்கலாம்தான். ஆனால் நம்மை பொத்திகினு அல்லவா படிக்கச் சொல்லியிருக்கிறார்.? நவீனம் என்பது படைப்புக்கு மட்டுமா.. பண்பாட்டுக்கும்தானே..? பண்பாட்டு நவீனம் உரத்துக் கேட்பதாயிற்றே..? பிறகெப்படி படைப்பு நவீனம் பொத்திக் கொள்வதாயிருக்கும்..? ஒரு வேளை சொல்லாமல் விட்ட இவற்றைத்தான் அவர் சொல்ல நினைத்திருப்பாரோ.. அப்படியானால் நாம் கடவுளைக் கண்டுபிடித்து விட்டோமோ.. அட எப்படிப் பார்க்கினும் அமிர்தமே ஜெயிக்கிறார், ஜெயிப்பார்.



எழுபதே ரூபாயில் கடவுளைக் கண்டுபிடிக்க ஒரு அழகிய வடிவத்தைக் கொடுத்த அன்னை ராஜேஸ்வரி பதிப்பகத்திற்கும், ஒரே ஓவியத்தில் கடவுளையும் பக்தனையும் சிதறவிட்டிருக்கும் முகப்போவியர் சந்ருவிற்கும், புகைப்படக் கலைஞர் மணிமேகலை நாகலிங்கத்திற்கும் நமது நவீன நன்றிகள்.


No comments: