கட்டுரைப் பூங்கா...!

உணவு உடை உறைவிடம் தமிழானால்..

பிரமாண்டமான தமிழ்ப் பெரு விழாவை ஒவ்வொரு தமிழ் நெஞ்சமும் நெகிழ்ச்சியோடு எதிர்க் கொள்கிறது. ஐந்து நாள் அரசு விடுப்புத் தந்து ஐநூறு கோடிச் செலவு செய்து விழாச் செய்வதில் தமிழரின் மொழி உலகெங்கும் பரவசத்தோடு கவனம் பெறுகிறது. ஆனால் அடுத்து வரும் ஆறாம் நாளில் தமிழர் நமது கவனமேனும் தமிழின்மீது இருக்குமா..?

தமிழின் புராதனத்தை ஆராவாரமாகப் பறைசாற்றிக் கொள்ளும் தமிழ் உலகம் தமிழைப் புழங்குவதில் அதே அளவு ஆர்வம் காட்டுகிறதா..? சாலையோரக் குத்துக்கல் சாமிக்குப் பூச்சூடிப் பொங்கலிட்டுக் கொண்டாடி விட்டு மறுநாள் குத்துக் கல்லாகவே விட்டுச் செல்வதற்கும் அதிரடிக் கொண்டாட்டங்களுக்குப் பிறகான தமிழின் நிலைக்கும் பெரிய வித்தியாசமில்லை.

முன்பு குழந்தைகள் ஓடி வந்து ‘மேங்கோ ட்ரீ’ன்னா என்ன என்று ஆங்கிலப் பாடத்தில் சந்தேகம் கேட்டார்கள். மாமரம் என்று தமிழில் சொன்னோம். இன்றைய குழந்தைகள் ‘வாட் இஸ் மாமரம்’ என்று தமிழ்ப் பாடத்தில் சந்தேகம் கேட்கிறார்கள். ‘மேங்கோ ட்ரீ’ என்று நாமும் ஆங்கிலத்தில் சொன்னால்தான் புரிகிறது.

மொழியின் வளத்தையும் பெருமையையும் நாடதிர முரசடித்துப் பாடிக் கொண்டு தமிழுக்கு எதிர்த் திசையில் நாம் பயணிக்கிறோமே ஏன்..? அடிமைப் படுத்த வந்த ஆங்கிலேயன் மதம் பறப்பும் பொருட்டேனும் தமிழை வளர்க்கத்தான் செய்தான். ஆனால் ஆங்கிலேயனை விரட்டியவர்களின் வாரிசுகளாகிய நாமும் நமது பிள்ளைகளும் இன்று ஆங்கிலேயர்களாகி விட்டோமே..? தமிழர்களின் காலத்தில்தானே தமிழ் என்றுமில்லாத பின்னடைவைச் சந்தித்திருக்கிறது.

பல மாநாடுகளைச் சந்தித்து விட்டோம். ஆயினும் தமிழை முழுமையான புழக்கத்திற்குக் கொண்டு வந்திருக்கிறோமா..? பண்பாட்டுத் தளத்தில் நாம் ஏற்படுத்திக் கொண்ட மாற்றங்களுக்குத் தக்கவாறு நமது மொழியினைத் தகவமைக்கத் தவறி விட்டோம். மாறிவிட்ட நமது பண்பாட்டின் இன்றைய நடவடிக்கைகளை நமது மொழிக்கு முழுமையாகச் சொல்ல வராது.

பண்டைத் தமிழர் கம்பு கேழ்வரகு சோளம் போன்றவற்றைக் கஞ்சியாகவும் கூழாகவும் சட்டியிலிட்டுச் சமைத்து உண்டனர் என்று ஆரம்பித்து முட்கால உணவு முறை பற்றித் தமிழிலேயே பக்கம் பக்கமாக எழுத முடியும். ஆனால் தமிழர்களின் இன்றைய உணவு முறை பற்றி தமிழை மட்டுமே பயன்படுத்தி ஒருசில வரிகளுக்கு மேல் எழுதிவிட முடியுமா..? காரணம் நூடுல்ஸ் நாண் பிரெட் குக்கர் விசில் மிக்ஸி கிரைண்டர் ஸ்டவ் லைட்டர் ஃபில்டர் டம்ளர் என்று நாம் நொடிக்கு நூறுதரம் சொல்லும் சமையலறை வார்த்தைகள் யாவும் ஆங்கிலமே. அவற்றுக்கான தமிழ்ப் பதங்கள் அகராதியில் இருந்தென்ன பயன், நமது அடுப்படியில் இல்லையே..?

பண்டைத் தமிழர்கள் பருத்தியாலான ஆடைகள் அணிந்தனர் என்றும் அவை பாலாவி, புகை, பாம்புச் சட்டை மூங்கில் தோல் போல மெல்லியனவாக இருந்ததாகத் தமிழ் பேசுகிறது. சிறுவர்களுக்குச் சிற்றாடை பெரிய பெண்களுக்கு வட்டுடை என்று தமிழர்களின் ஆடை வரலாறு பற்றி துள்ளிக் கொண்டு பேசுகிறது தமிழ். ஆனால் நமது இன்றைய ஆடைப் பழக்கங்கள் பற்றி ¢ பேசும்போதுதான் டிசர்ட் ஷார்ட் சுடி ஜீன்ஸ் பெர்முடாஸ் என்று தமிழ் ஊமையாகிவிடுகிறது.

பழந்தமிழர்களின் பொழுது போக்கு அம்சங்களை அழகாகப் பேசும் தமிழ். தமிழர்கள் கூத்துக்கள் கண்டு களித்தனர். சிறுமியர் மணல்வீடு கட்டி விளையாடினர். அம்மானை ஆடினர். ஊஞ்சலாடினர். ஆடவரும் மகளிரும் பந்தாட்டம் ஆடினர். ஆடவர்கள் தங்களுக்குள் மற்போர் செய்து மகிழ்ந்தனர். இன்றைய தமிழர்களின் பொழுது போக்குகள் சம்பந்தமான எத்தனை வார்த்தைகளைத் தமிழுக்குத் தந்திருக்கிறோம்.

பண்டைய கூத்து பற்றி முழுமையான தமிழ் விளக்கங்கள் உண்டு. இன்றைய பிரதான பொழுது போக்கான சினிமாவை நாம் தமிழ்ப் படுத்தியிருக்கிறோமா..? மொந்தை மொந்தையான அகராதிகளை வைத்துக் கொண்டு இன்னும் பல மாநாடுகள் வேண்டுமானால் நடத்தலாம். ஆனால் உறவுகள் தொழில் பொருளாதாரம் பழக்க வழக்கம் கலாச்சாரம் என்று மக்களின் எல்லாவிதச் சொல்லாடல் தேவைகளையும் நடைமுறையளவில் பூர்த்தி செய்யும் மொழியாகத் தமிழை ஆக்காமல் தமிழ் வாழாது.

அழியும் அபாயத்திலிருக்கும் மொழிகளின் வரிசையில் தமிழையும் சேர்த்திருக்கிறார்கள் உலக மொழி ஆய்வாளர்கள். விடுதலைக்கு முன்னர் போராளிகளுக்கு வீரம் பாய்ச்சிக் கோலோச்சிய தமிழுக்கு என்ன நேர்ந்தது இடைப்பட்ட காலத்தில்..?

சுதந்திரத்திற்கு முன், மொழிவாரி மாகாண ஆட்சிமுறையில்தான் முழுமையான சமூகப் பாதுகாப்பை எதிர்பார்க்க முடியும் என்று உணர்ந்த மக்களிடையே மொழி இன உணர்வுகள் தலை தூக்கின. விடுதலைப் போரில் மக்களை ஒன்று திரட்ட வேண்டியிருந்ததால் சுதந்திரத்திற்குப் பின் மொழிவாரி மாகாணங்கள் அமைப்பதாக உறுதியளித்து அவர்களை ஒன்று திரட்டினார்கள் தேசியத் தலைவர்கள்.

ஆனால் விடுதலைக்குப் பின் முதலில் தரப்பட்ட வாக்குறுதியையே போராடிப் பெற வேண்டியதாயிற்று. ஆரம்பத்தில் எல்லா இந்தியர்களையும் இந்தியால் மட்டுமே ஆள முடியாது என்ற நிலையில் அரசுக்கும் மக்களுக்கும் நடுவே இடைத் தரகனாக ஆங்கிலம் வைக்கப்பட்டது. பிராந்தியப் பிரிவினைகளை, மொழிப் பிரச்சனைகளை எதிர்க் கொள்ளவும் அதே நேரம் அரசு நிர்வாகத்தை ஆங்கிலேயன் விட்டுப் போன இடத்திலிருந்து தொடங்கவும் ஆங்கிலம் அவசரமாகத் தேவைப்பட்டது. அது அன்றைக்கு அதசரிதான்..

ஆனால் இன்று..? நாம் நமது சொந்தத் தேசத்தில் அரை நூற்றாண்டு தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறோம். அன்று நோய்க்கு மருந்தாகத் தின்ற ஆங்கிலம் இன்று ஆகாரமாகவே மாறிவிட்டதே..?இந்தியை எதிர்த்த தமிழ் வீரர்கள் ஆங்கிலத்திற்கு அடிபணிந்தது எப்படி..? எல்லாக் கேள்விகளுக்கும் ஒரே பதில்தான்..

தொலை நோக்குள்ள மொழிக் கொள்கைகள் ஏதும் நம் அரசுகளிடம் இல்லை என்பதே அது. விடுதலைக்கு முன் பல்வேறு அம்சங்களை ஏற்றுக் கொண்டு ஒன்று படுவதுதான் ஒருமைப்பாடாகப் பிரச்சாரம் செய்யப்பட்டது. அது நியாயமாகவும் இருந்தது. விடுதலைக்குப்பின் அனுபவம் வேறு மாதிரி உள்ளது.

மற்ற அனைத்தையும் அழித்து விட்டு ஓற்றைப் படுத்துவதுதான் ஒருமைப்பாடு எனுமளவு நமது தாராளமய அரசுகளின் ஒருமைப்பாட்டுக் கொள்கைகள் இன்று மாறியிருப்பதாகப் படுகிறது. மொழிவாரி மக்கள் தத்தம் அடையாளங்களோடு தேசிய நீரோட்டத்தில் நீடிப்பதற்குப் பதில் அவர்கள் மொழி இன பண்பாட்டு உணர்வுகள் மறக்கடிக்கப்பட்டவர்களாக மூளைச் சலவை செய்யப்பட்டு வழிநடத்தப் படுகிறார்கள். இந் நடவடிக்கைகளை உலகமய பொருட்குவிப்பு மையங்கள்தான் முன்னெடுத்துச் செல்கின்றன.

உலகப் பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம் அரசுகளை நெருக்கடிக்கு உள்ளாக்கும் அப் பன்னாட்டு நிறுவன மையங்களுக்கு மக்களின் தனிப்பட்ட அடையாளங்களை அழித்து அவர்களை ஒரே லாயத்தில் கட்டி வைப்பதுதான் லட்சியமாக இருக்கிறது. ஒரே விதமான மிதமிஞ்சிய உற்பத்திகளைச் செய்யவும் அப்படி உற்பத்தி செய்த பொருட்களுக்கான உடனடித் தேவையை ஏற்படுத்திக் கொள்ளவும் உலக மக்களை ஒரே பழக்க வழக்கங்களின் கீழ் கொண்டு வருவது அவர்களுக்கு இன்றியமையாததாகிறது.

உதாரணமாக உலகச் சந்தையில் செலவாணியாகும் மொத்தக் கத்திரிக்காய்ச் சந்தையில் இந்தியாவின் நுகர்வு 40 சதம் என்று கண்டுபிடித்த உடனே இங்கு வந்து குதிக்கிறது பி.டி கத்திரிக்காய். வரும்போதே பாரம்பரிய இந்திய கத்திரிக்காய்ச் சாகுபடிக்கு முழுமையாக உலை வைக்கும் எல்லா ஏற்பாடுகளோடும் வருகிறது அந்த உலகமயக் கத்திரிக்காய். அதேபோல்தான் ஆங்கிலமும். உலகமய வியாபாரத்திற்கு அதை ஒரு பொது சமிக்ஞையாக்கிக் கொண்டதும் மற்ற பாரம்பரிய மொழிகளை நசுக்குகிறார்கள்.

இந்தப் போறாத காலத்தில் மத்திய அரசு பின்னடைவைச் சந்தித்து வரும் தனது பிராந்திய மொழிகளைக் காக்க உடனடியாக முன்வரவேண்டும். போர்க்கால அடிப்படையில் 8வது அட்டவணையில் உள்ள 22 மொழிகளும் மத்திய அரசின் அனைத்துத் துறைகளிலும் புழங்கும் ஏற்பாட்டைச் செய்ய வேண்டும். உயர்நீதி மன்றங்களில் இன்று வரை வழக்காடு மொழியாகத் தமிழை அனுமதிக்காதிருப்பது எத்தனை கொடுமை..?

குடிமக்கள் தங்கள் சொந்த மொழியில் தங்களின் அரசோடு பேச முடியாது என்பது வரலாற்றுக் காலங்களில் வேற்று அரசர்களின் அடிமைகளாக மக்கள் இருந்ததற்கு ஒப்பானது. ஆங்கிலம் அல்லது இந்தி தெரியாத பாராளுமன்றத் தமிழ் உறுப்பினர்கள் அங்கே பேச முடியாமல் இருப்பது தமிழ் இனமே ஊமையானதற்குச் சமமானது.

மாநிலத்தைப் பொறுத்தரை தமிழ்க் கோஷம் என்பது வெறும் அரசியல் ஆதாயத்திற்காக மட்டுமே என்ற நிலைதான் தொடர்ந்து நீடிக்கிறது. தமிழை அன்றாடப் பயன்பாட்டு மொழியாக மாற்ற இன்னும் எந்த ஒரு ஏற்பாடும் இல்லை. அத்தனை ஏன், தமிழ் ஆட்சி மொழியாகி (1957) அரை நூற்றாண்டுகள் கடந்தும் கூட தமிழக அரசின் நிர்வாகம் இன்னும் முழுமையாகத் தமிழ்மயமாக்கப் படவில்லை. போதாக் குறைக்கு கணினிமயமாக்கத்தால் இப்போது இருக்கிற தமிழுக்கும் ஆபத்து நேர்ந்து வருகிறது.

முதலில் முழுமையான தமிழர் வரலாறு தொகுக்கப்பட வேண்டும். தன் இனவரலாறு ஒவ்வொரு தமிழனுக்கும் தெரிந்திருக்க வேண்டும். தமிழர் வீடுகளுக்குள் முழுமையான தமிழை நுழைக்க வேண்டும். தமிழர்களின் உணவு உடை உறிவிடங்களில் தமிழைத் தழைக்கச் செய்து விட்டால் பிறகு உணர்வில் தானாக வந்து விடும் தமிழ். இதெல்லாம் ஏதோ சாத்தியப்படாத விசயங்கள் அல்ல. தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி முழுவீச்சில் இறங்கினால் சொற்ப கால அவகாசத்தில் கைகூடும். அப்படிச் செய்தால் .அறிவியல் என்ன, அனைத்தையும் ஆண்டு விடும் தமிழ். தமிழரால் முடியாதது ஏதேனும் இருக்கலாம். ஆனால் தமிழால் முடியாதது எதுவும் இல்லை.
(சூலை 2011 வடக்கு வாசல் இதழில் வெளியானது)

No comments:

Post a Comment