கவிதைப் பூங்கா...!

'செய்தியாளின் செய்தி'
------------------------------------
விடியலுக்கும் அவனுக்கும்

முடிவிலாச் சண்டை..!

பிந்தி, வினாடி பிசகினாலும்

முந்திவிடும் அவனையது..!



வாசல் தாண்டி வந்தும்

வரக்காத்திருப்பர் சிலர்..

அவனுக்காக அல்ல

அவனெரியும் தாள்களுக்காக..!



செய்திகள் நுகரும்போதேனும்

நினைப்பரோ அவனை..? ஆனால்

தாள் வீச மறந்த பொழுதுகளில்

கடுமையாய்

சொல்வீச மறந்ததில்லை யாரும்..



அவனின் கல்விக்கு

உயரம் குறைவு ..

கெட்டியாய் ஒரு வேலை

எட்டவில்லை..

கிட்டிய வேலையின்

பற்றாக்குறைகளை

முன்னிரவில் விழித்திருந்து

செய்தித்தாள் விநியோகித்து

சிட்டுப்போல் சேகரிக்கிறான்..!



குருவிகள் பயணிக்கும்

அவன் வீட்டுக்

கூரைத் துளைகளில்

வானம் எட்டிப் பார்த்து

வருத்தம் சொல்கிறது

மழையாகவும் வெயிலாகவும்..!



உலக அரங்கங்கள்

புல்லரித்துக்கொள்ளும்

புள்ளிவிபரங்களுக்கெல்லாம்

அவன் போன்றவர்கள்

வெளியே தெரியக் கூடாத

ரகசிய நோய்கள்..!



குப்பை லாரியும்

கொள்ளாத அவன்

குடும்ப வறுமையை

போகும் வழியெங்கும்

முக்கித் தமுக்கடிக்கும்

அவனின் பங்குதாரர்

மிதிவண்டி..!



ஆமாம்..

இதையெல்லாம் தவிர

அப்படி

வேறென்ன படிப்பார்கள்

அவன் வீசும்

அத்தாள்களில்..?


'ராத்திரிச் சிந்தனை'
--------------------------------------------
சந்திரப் பூவைச் சுற்றி

நட்சத்திர வண்டெல்லாம்

மொய்க்குதுபார் அந்தி வானத்திலே !

-

வெயிலை விற்ற பணம்

வீட்டுக்கு கொடுக்க

சூரியன் போகுது தூரத்திலே !..

-

மஞ்ச மஞ்ச வானம் கொஞ்சங் கொஞ்சமாக

தஞ்சம் தஞ்சம் போகும் இருட்டுக்குள்ளே - அதை

வெள்ளை வெள்ளைப் பஞ்சுபோல் வெளுத்துத் தராமே

விடை பெறுவாளோ இரவுப்பெண்ணே..?

-

ஒ.. ராத்திரி ஓடுது கருப்பு நதி - அதில்

ஆசை அழுக்கைக் கரைப்போர் சிலபேர்..!

சேர்த்த செல்வம் இரைபபோர் பலபேர்..!

-

இருட்டு மட்டும் இல்லாதிருந்தால்

எந்த நிழலில் மனம் ஒதுங்கும் ?

கருப்பு மழை பெய்யாதிருந்தால்

வாழ்க்கைத் தோட்டம் வறண்டுவிடும்..!

-

பகலின் முதுகா ராத்திரி..?

ஒளியின் அழுக்கா ராத்திரி..?

வண்ணக் காற்றா ராத்திரி..?

வானத்தின் கதவா ராத்திரி..?
--------------------------------------------

'டாலர் சிட்டி கீதம்'

---------------------------------
( பிறந்த மண் விட்டு பிழைப்புத்தேடி டாலர்சிட்டி நோக்கிப்

புறப்படும் முன் கேட்க வேண்டிய உஷார் கீதம் )


பொம்மியக்கா திம்மியக்கா சேதி கேளுங்கடி - பீத்தைப்

பட்டிக்காடு வேணாமடி பட்டணம் வாங்கடி

திருப்பூரில் சூபபுத்திட்டம் நிறைய்ய இருக்குடி - எங்க

திமிங்கலங்கள் ஒண்ணாக்கூடிப் போட்ட திடடமடி



அஞ்சுவருசம் பத்துவருஷம் எழுதி வாங்குவோம் - சுமங்கலியா

அக்காதங்கை எல்லாரையும் வேலைக்குச் சேர்த்துவோம்

ஆயிரத்தை எழுதிக்கிட்டு ஐநூறு தருவோம் - எவளும்

ஆன்னாஊன்னா அப்புறம்வெறும் முன்னூறு தருவோம்



வேலைக்கார நாய்கள்தட்டி கேக்கப்ப் படாது - அப்புறம்

வில்லங்கமேதும் நாங்கசெஞ்சா புலம்பக் கூடாது

வரகுக்கஞ்சிக்கு இல்லாமத்தானே பட்டணம் வாறீக..? - இங்கே

விடுதிச் சோத்துக்கு வேலைசெஞ்சா கெட்டாபோவீக..?



ஈயத்தட்டை ஏந்திக்கிட்டு வரிசையில் வாங்கணும் - சோத்தில்

ஈயிபல்லி இருந்துச்சுன்னா அசைவம்னு திங்கணும்

களத்துமேட்டில் சேரும்சோறும் ஒன்னாத்தின்னவங்க - இங்கே

நளபாகம் கேக்குறது கொழுப்புத் தானேடி..?



எட்டுகெட்டு அளவிலொரு அரண்மனை தாறோம் - அதிலே

எட்டுமூதி படுத்துக்கலாம் பாயொண்ணு தாறோம்

ஆடுமாட்டை பட்டியடைச்சுப் பழகினநீங்களா - அறையில்

ஆளிடிச்சா நெரிசலுன்னு குடைச்சல் பண்றது..?



கள்ளிமறைப்பில் போனநீங்க கக்கூசில் போலாம் - அதுலே

தண்ணிவரும் நாப்பொழுதில் கழுவீட்டும் வரலாம்

ஆணுபெண்ணுக்குத் தனித்தனியா கக்கூஸ் இருக்குடி - கதவு

ஒடைஞ்சிருந்தா பொம்பளைது கதவில்லாட்டி ஆமபளைது



பெட்டைநீங்க மறைஞ்சுநின்னு குளிக்க வேணுன்னுதான் - தனியா

அட்டைபோட்டு நாலாப்பக்கம் கட்டி வெச்சிருக்கோம்

ஆத்துமேட்டில் அவுத்துப்போட்டு குளிச்ச கேட்டுக்கு - வேலைக்குச்

சேத்துக்கிட்ட பாவத்துக்கு சிலுப்பக் கூடாது



விடுதிக்குள்ளே மாசாமாசம் சினிமாக் காட்டுவோம் -அதுவும்

வேலைமுடிஞ்ச மூணாம்ஜாமத்தில் மட்டும் ஓட்டுவோம்

விடுமுறைநாள் ஒண்ணோரெண்டோ வெளியிலும் போலாம் - போயிட்டு

அரைநாளில் திரும்பலேன்னா வேலையும் போலாம்



வேலைபோனாலும் வீட்டுக்குமட்டும் அனுப்பிறமாட்டோம் - செஞ்ச

வேலையிலேயே புதுக்கூலின்னு மறுபடி சேர்ப்போம்

ஒத்தெழுதின எக்ரிமென்ட்டு முடியறவரைக்கும் - நீங்க

செத்தாக்கூட ஆவியப்புடிச்சு வேலை வாங்கிருவோம்..


-------------------------------------------------------------------------------
தப்பியும்...

உறக்கம் பசி போல் கூடியிருத்தலும்

உபாதைக் கணக்கே ஆணுக்கு

உயிர்த்தொடர் செய்தலில் உறவேகூட

இயற்கைப் பொறுப்பாம் பெண்ணுக்கு

தந்தைப் பதவி சமூகச் செயற்கை

தப்பும் தவறும் செயற்கையிலுண்டு..

இயற்கை தாய்மை தாய்மை இயற்கை

இரண்டும் தப்பியும் தவறிழைக்காது.
 
(மார்ச் 2011 மங்கையர் மலரில் வெளியானது)

------------------------------------------------------------------

மூடிய விழிகளில்..


சத்தமிட்டு விடாதீர்கள் யாரும்

உறக்கத்திலிருக்கிறாளென் மனைவி

சந்தடி செய்யாது நானும்

எதிரமர்ந்திருக்கிறேன்.

பளிங்கு வீடு வைரம் வாகனமெனப்

பட்டியலே வைத்திருந்தாள் காதலின்போது.

சொந்தமாய்ச் சிறுமனையும் பட்ட

கடனொழிநத்தால் போதுமெனச்

சுருக்கியும் கொண்டாள் ஓர்நிலையில்.

வாடகை வீடுபல கடந்தும

மணவாழ்வில் மத்திமம் தாண்டியும்

ஏலாத வரும்படியில்

எதுவும் வாய்த்ததில்லை-

இருவருக்குள் கனக்கும்

சுணக்கம் தவிர..

மலையைச் சாய்ப்பதாய்

கடலைக் குடிப்பதாய்

அவளுக்காக அன்று

வாயளந்தவை மட்டும்

திறந்த அவள் கண்களில்

தினமும் சுடுகிறதென்னை.

அவளின் முடிய விழிகளில்தான்

காதலை மட்காது காக்கும்

மன்னிப்புக் கசிகிறது..

சத்தமிட்டு விடாதீர்கள் யாரும்.

(16-3-2011 ஆனந்த விகடனில் வெளியானது)
-------------------------------------------------------------

சிற்றோவியம்


கண்டிருக்கமாட்டீரெங்கள்

கண்கவர் வீடுபோல் வேறெங்கும்.



அவளுக்குப் பிடித்த

ஆடல்பாடலான அடுப்படி

எனக்கும் படிக்க எழுதவென

ஏகாந்தமாய்த் தனியறை



துணிமாற்ற தனித்திருக்க

அக்காவுக்குத் தனியறை

அவனும் காரோட்ட

கரணம்போட அகண்ட அறை

வந்தவர் கால்நீட்ட

நீளநீள வராந்தாக்கள்



பளிங்கு முன்னழகு சுற்றிப்

பச்சைத் தோட்டமெனச்

சொன்னால் நம்ப மாட்டீர்கள்

வந்து பாருங்கள்

வரைந்து வைத்திருக்கிறான்

வண்ணமாய்த் தாளொன்றில்.
 
(26-3-2011 கல்கியில் வெளியானது)
--------------------------------------------------------------

No comments: